நீருக்கான அன்றாடப் போராட்டம்: பதுளையிலுள்ள சார்னியா தோட்ட மக்களின் கதை

பியுமி ரவீந்திர -22.06.2023

நீர்மூலத்தை நோக்கி மலைச் சரிவில் இறங்கிச் செல்லும் இரு பெண்கள்

சார்னியா தோட்டத்திலுள்ள ஒரு சமூகக் குழுமமான மஹதென்னவில் காணப்படும் நீர்மூலத்தையும் நீர் விநியோக முறைமையையும் பகுப்பாய்வு செய்வதற்கென செவனத (SEVANATHA) செயற்றிட்டக் குழுவினர் பதுளையிலுள்ள சார்னியா தோட்டத்திற்கு தமது நான்காவது கள விஜயத்தை மேற்கொண்டனர். இந்தக் கள விஜயமானது சமூகத்தின் அன்றாட நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தை நேரடியாகக் கண்டறிவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. பெண்கள், தமது பணி நேரம் முடிந்த பின்னர், இராப்பொழுகளில் குளிப்பதற்காகவும் ஆடைகளைத் துவைப்பதற்காகவும் குறைவான உயரப்பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை நீரூற்றுக்கும் நீரோடைக்கும் நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்வது அதிக ஆபத்துமிக்க ஒரு பயணமாகவே அமைகிறது. இத்தகையதொரு பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இதற்குப் பின்னணியிலுள்ள சில தகவல்கள் குறித்து ஆராய்வோம்.

ஒரு வெப்பமண்டல நாடாகவுள்ள இலங்கை, பிரதானமாக இரு பருவகாலங்களில் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. அவையாவன: மே தொடக்கம் செப்டம்பர் வரையான தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான வடகிழக்கு பருவக்காற்று மழை. மேலும், நீரூற்றுக்கள், நீரோடைகள், ஆறுகள், குளங்கள் மற்றும் வாவிகள் போன்ற இயற்கை நீர் வளங்களை அதிகரிப்பதற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், இடைப்பட்ட பருவகால மழைவீழ்ச்சியும் இங்கு காணப்படுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பான நிலவமைப்பு மற்றும் காலநிலை வலயங்களுக்கேற்ப, குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாய நோக்கங்கள் முதலியவற்றுக்குமான நீரின் கிடைக்கத்தகு தன்மை மாறுபடுகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இலங்கையில் மழைவீழ்ச்சியின் அளவு கணிசமானளவுக்கு மாறுபட்டுள்ளது. 1963 இல் 2522.42 மில்லிமீற்றர் என உயரளவில் காணப்பட்ட மழைவீழ்ச்சி, 1980 இல் 1291.20 மில்லிமீற்றராகக் குறைவடைந்துள்ளதாகப் பதிவுகள் காட்டுகின்றன. எனினும், அண்மையில் இது 2020 இல் 1610.83 மில்லிமீற்றரில் இருந்து 2021 இல் 2038.73 மில்லிமீற்றர் வரை அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், மலையகப் பெருந்தோட்டச் சமூகங்கள் உட்பட கிராமப்புறங்களில் வாழும் குடும்பங்கள் தமது அன்றாட நீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

அப்படியானால், சார்னியா தோட்டத்தில் மக்கள் நீருக்காகப் போராடுவதன் பின்னணியில் உள்ள காரணம்தான் என்ன?

சார்னியா தோட்டம் என்பது 1985 இல் தாபிக்கப்பட்ட ஒரு தேயிலைத் தோட்டமாகும். இது தற்போது Malwatte Valley Plantation கம்பெனிக்குச் சொந்தமாக உள்ளது. 165 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இத்தோட்டம், மொத்தமாக 619 தொழிலாளர் குடும்பங்களைக் கொண்டுள்ளது. மஹதென்ன மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை நீரூற்றுதான் இச்சமூகத்தினரின் அடிப்படையான நீர் மூலமாகும். நீரூற்றில் காணப்படும் நீர் சேகரிப்புத் தொட்டியொன்றுடன் இணைக்கப்பட்ட பல்வேறு குழாய்களுக்கூடாக இங்குள்ள குடும்பங்கங்களுக்கான நீர் விநியோகிக்கப்படுகின்றது.

இங்குள்ள மக்கள் தற்போது எவ்வாறு நீருக்கான அணுகலைக் கொண்டுள்ளனர் என்பது பற்றி சார்னியா தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பின்வருமாறு எடுத்துரைத்தார்:

"சார்னியா தோட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரை நீர் வழங்கல் என்பது ஓர் இன்றியமையாத சேவையாக அமைந்துள்ளது. எனவே, மஹதென்ன பிரிவைச் சேர்ந்த மக்கட் குழுவினர் இந்துக் கோவிலொன்றுக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து நீர் வழங்கலுக்கு ஏற்பாடு செய்தனர். ஒரு நீர் பம்பி மூலம் நீர் இறைக்கப்பட்டு சமூகத்திலுள்ள பொது தண்ணீர்க் குழாய்களுக்கு அது விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சேவைக்காக ஒவ்வொரு குடும்பமும் மாதாந்தம் கோவிலுக்கு 300 ரூபா செலுத்துகின்றது என்பதுடன், இதனால் தோட்டப் பகுதியிலும் அதன் சுற்றயல் பகுதிகளிலும் நீர் வளம் செழிப்பாக உள்ளது. எனினும், போதியளவு நீர் முகாமைத்துவம் இல்லாமையே சமூகத்தில் நீர் பற்றாக்குறை நிலவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது."

குடியிருப்புப் பகுதியில் நீர் மாசடைந்துள்ளதாக சிலர் கூறினர். விலங்குகளின் கழிவுகள் நீரூற்றிலுள்ள நீரை மாசுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளமைக்கான ஆதாரமூலங்கள் காணப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், ADB குவாட்டர்ஸ் (ADB Quarters), ஓட்டு லயன் (Ottu Line) மற்றும் மேட்டு லயன் (Mettu Line) போன்ற மஹதென்னவின் துணைக் கொத்தனிகளில் வசிப்பவர்களுள் பெரும்பாலானோர், நீர்மூலத்திற்கு அருகாமையில் கட்டப்பட்ட நீர் சேகரிப்புத் தொட்டியுடன் முறையற்ற விதத்தில் இணைக்கப்பட்டுள்ள நீர் விநியோகப் பாதைகளிலிருந்து நீரைப் பெறுகின்றனர். மேலும், இந்த நீர் சேகரிப்புத் தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்தும் அது முறையாகத் தொழிற்படுவதில்லை. எவ்வித கட்டுப்பாட்டு வேல்வுகளும் (control valves) இல்லாமல் நீர் விநியோகப் பாதைகளை முறையற்ற விதத்தில் பொருத்துவதன் காரணமாக அங்கு நீரை சேகரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ADB குவாட்டர்ஸில் வசிக்கும் இருபத்து-மூன்று வயதுடைய பெண்ணொருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"வாரத்திற்கு இருமுறை, எங்களில் சிலர், நாம் வசிக்கின்ற ADB குவாட்டர்ஸிற்கு நீரை வழங்குகின்ற தனிப்பட்ட நீரோட்டப் பாதைகளை இணைப்பதற்கென 6 மணிக்குப் பின்னர் ஒற்றையடிப் பாதை மற்றும் புதர்க் காடுகள் என்பவற்றுக்கூடாக மஹதென்னயில் உள்ள நீர்மூலத்திற்கு ஏறுகின்றோம். மழைக் காலத்தில், இவ்வாறு மலைச் சரிவுகளில் ஏறி இறங்குவது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும். ஆனாலும், அன்றாட உபயோகத்திற்கு நீர் அவசரமாகத் தேவைப்படுவதன் காரணமாக இத்தகைய சிரமத்திற்கு நாம் உள்ளாக வேண்டிய நிலை காணப்படுகின்றது."

2021 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஒப்புநோக்கு ஆய்வானது, முறைமை பற்றிய உரிய முகாமைத்துவம் இல்லாமையே இத்தோட்டத்தில் தற்போது காணப்படும் நீர் வழங்கலுடன் தொடர்புடைய பிரதான பிரச்சினையாகும் என்ற விடயத்தை வெளிப்படுத்தியது. தனியானதொரு குழாய்நீர் பாதையில் பல இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளமை மற்றும் சிலரது செல்வாக்கின் நிமித்தம் நீர் விநியோகத்தில் தமக்கு வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை ஆகிய காரணங்களினால் பல குடும்பங்களுக்கு சீரற்ற முறையில் நீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும், போதியளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இச்சமூகத்திலுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அநேகமான நேரங்களில், நீர்க்குழாய்கள் நீர்மூலத்துடன் இணைக்கப்படும்போது அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரம் போன்ற மிகக் குறுகிய நேரத்திற்கு மாத்திரமே நீர் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ADB குவாட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்கின்றது என்பதுடன் மேட்டு லயனிலுள்ள (Mettu Line) எட்டுக் குடும்பங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு மணித்தியாலத்திற்கு மாத்திரம் நீரைப் பெற்றுக்கொள்கின்றன. இங்குள்ள குடியிருப்பாளர்கள் சீமெந்தினால் உருவாக்கப்பட்ட தொட்டிகள், ஜாடிகள், பானைகள் அல்லது பீப்பாய்களைப் பயன்படுத்தி நீரைச் சேகரித்துக் களஞ்சியப்படுத்தி வைக்கின்றனர். ஆனாலும், அது அவர்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக அமையவில்லை.

இங்குள்ள குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது, தற்போதுள்ள நீர் வழங்கல் முறைமையும் அதன் முகாமையும் ஒழுங்கற்றவையாகவும் தமது அன்றாட நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதாதவையாகவும் இருப்பதனால், அவை தொடர்பில் அவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற விடயம் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தற்போதுள்ள நடைமுறை தற்காலிகமானதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் உள்ளது. அவர்களின் கருத்துப்படி, மஹதென்னவிலுள்ள இயற்கை நீரூற்று முறையாகப் பாதுகாக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டால், அது போதியளவிலான கொள்ளளவைக் கொண்டிருக்கும் என்பதுடன், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கும் நீர்த் தொட்டிகளுக்கு நீரை இறைப்பதற்கான சாத்தியமும் காணப்படும். மேலும் இச்சமூகத்திலுள்ள மக்கள் தோட்ட முகாமைத்துவத்தின் நெருங்கிய கண்காணிப்பின்கீழ் உரியமுறையில் முகாமை செய்யப்படும் நீர் வழங்கல் முறைமையொன்றை நிர்மாணிக்குமாறும் யோசனை தெரிவித்துள்ளனர்.

2023 ஜனவரியில் சார்னியா தோட்டத்தில் போட்டோவொய்ஸ் முன்னோக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்று (Photovoice Perspective Workshop) நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையிலிருந்து பெற்றுக்கொண்ட முக்கிய செய்தி என்வென்றால், பொருத்தமான சமூக இடையீடுகளுக்கூடாக தற்போதைய நீர் வழங்கல் முறைமை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். தற்போது நீருக்கான அணுகலைக் கொண்டுள்ளனரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அங்குள்ள எல்லாக் குடும்பத்தினரும் நீரைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே அத்தகைய இடையீட்டின் பிரதான குறிக்கோள் ஆகும். நீர் தொடர்பாகவுள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதென்பது பல பங்குதாரர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு கூட்டு முயற்சியாகும். அதற்கு கணிசமானளவு காலமும் வள உள்ளீடும் அவசியமாகும்.

செவனத நகர்ப்புற வள நிலையத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தரான பியுமி ரவீந்திர, உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்புக் (IUI) குழுவின் ஓர் உறுப்பினரும் ஆவார். உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்பு (Inclusive Urban Infrastructure) என்பது, 'உள்ளகப்படுத்தல் பற்றிய பாதைகளை நோக்கி: மிகவும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான உட்கட்டமைப்புப் பணியை மேற்கொள்ளல்' (மானியக்கொடை குறிப்பிலக்கம் ES/T008067/1) எனும் தலைப்பின்கீழ், உலகளாவிய சவால்கள் பற்றிய ஆய்வு நிதியத்திற்கூடாக (Global Challenges Research Fund) UK Research and Innovation எனும் அமைப்பினால் நிதியளிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும்.