எரிபொருள் நெருக்கடி: இலங்கையின் கொழும்பிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஓர் இரட்டைச் சுமை

மொஹிதீன் எம். அலிக்கான் மற்றும் சகீனா அலிக்கான் -24.07.2022

சமந்திரனபுரயில் மண்ணெண்ணெய்க்கான நீண்ட வரிசை

2021 ஆகஸ்ட் மாதத்திலிருந்து திரவநிலைப் பெற்றோலிய எரிவாயு (LPG), பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விநியோகப் பற்றாக்குறையும் அவற்றின் உயர் விலைகளும் அனைத்து இலங்கையர்களினதும் வாழ்வில், குறிப்பாக ஏழைகளின் வாழ்வில், குறிப்பிடத்தக்க தாக்கமொன்றை ஏற்படுத்தி இருந்தது. அந்நியச் செலாவணிக் கையிருப்பில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.

2022 ஜனவரி முதல் மார்ச் வரை மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 26% இனால் வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சி எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2021 செப்டம்பரில் 1,493 ரூபாவாகவும், 2021 ஒக்டோபரில் 2,675 ரூபாவாகவும் மற்றும் 2022 ஏப்ரல் இறுதியில் 4,860 ரூபாவாகவும் காணப்பட்டது. அதேபோன்று, 2021 ஜூனில் 137 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை பன்மடங்கு அதிகரித்து 2022 ஏப்ரலில் 338 ரூபாவாக மாறியது. அண்மைய மாதங்களில் எரிபொருள் விநியோகத்தின் மீதான தட்டுப்பாடு குறிப்பாக மிகக் கடுமையாக இருந்து வருகின்றது.

எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நம்பியிருத்தல் ஆகியவற்றின் விளைவாக, நாடு முழுவதுக்குமான மின்வெட்டு ஒரு வழக்கமான செயற்பாடாக மாறியுள்ளது. மேலும், சமையல் மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் போதிய எரிபொருள் இல்லாத காரணத்தினால் அதிகமான நகரங்கள் பெரும் சீர்குலைவுக்கு முகங்கொடுத்துள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினையாக இருந்தாலும்கூட, கொழும்பில் வதியும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் இப்பிரச்சினையால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொழும்பிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களைக் கொண்ட மூன்று குடியிருப்புப் பகுதிகளில் (நவகம்புர, சமந்திரனபுர மற்றும் லுனுபொக்குன) நடாத்தப்பட்ட எமது ஒப்புநோக்குக் கருத்துக்கணிப்பின் (baseline survey) முடிவுகளின்படி, 72.7% வீடுகளில் சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முதன்மையான சக்திமூலம் சமையல் எரிவாயுவாக உள்ளது. அதேவேளை, நேர்காணல் செய்யப்பட்டவர்களுள் 24.3% ஆனோர் சமையலுக்காக மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்துவதாகவும், 2.3% ஆனோர் மாத்திரம் உணவு தயாரிக்கும் போது விறகுகளைப் பயன்படுத்துவதாகவும் கூறினர்.

இப்பகுதிகளில் நடாத்தப்பட்ட நேர்காணல்களுக்கிணங்க, இக்குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக் காரணமாக இப்போது சமையலுக்கான பிரதான எரிபொருளாக மண்ணெண்ணெய்யைத் தெரிவுசெய்து வருகின்றனர். மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய பர்ஸானா, கடந்த காலங்களில் சமையலுக்கான பிரதான எரிபொருளாக சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தினார். அவர் இப்போது மண்ணெண்ணெய்க்கு மாறியுள்ளார். இருப்பினும், மண்ணெண்ணெய்யைப் பெறுவதுகூட இப்போது அவருக்கு ஒரு சவாலான விடயமாக மாறியுள்ளது. இதுபற்றி அவர் பின்வருமாறு கூறினார்:

"சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருவதனால் நாம் கடந்த மாதம் (2022 மார்ச்) மண்ணெண்ணெய்க்கு மாறினோம். ஆனாலும் மண்ணெண்ணெய் விலை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் நீண்ட வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மண்ணெண்ணெய் வாங்க அதிகாலை 6 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றால், காலை 10 அல்லது 11 மணிக்கே மீண்டும் வீட்டுக்கு வர முடியுமாக உள்ளது."

நாட்டின் பிரதான எரிபொருள் விநியோகத்தரான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருளை விநியோகிப்பதன் காரணமாக, சில வாடிக்கையாளர்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளாமலேயே வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 58 வயதுடைய மல்லிகாவுக்கு இவ்வாறான ஒரு நிலையை அனுபவிக்க நேர்ந்தது. அவர் பின்வருமாறு கூறினார்:

"வரிசைகளில் காத்திருந்தாலும்கூட வாங்குவதற்கு மண்ணெண்ணெய் இல்லை. நாம் வெறுங்கையுடன்தான் திரும்ப வேண்டும். இன்று எம்மிடம் மண்ணெண்ணெய் இல்லை, அது முடிந்துவிட்டது."

எரிபொருள் தட்டுப்பாடானது குறைந்த வருமானம் பெறுபவர்கள் தமது அன்றாட வாழ்வைக் கொண்டுநடாத்துவதை மாத்திரம் கடினமாக்கவில்லை. மாறாக, அவர்களின் வாழ்வாதாரங்களிலும் பாரதூரமான தாக்கமொன்றை ஏற்படுத்தியுள்ளது. துரித உணவுகளைச் சமைத்தல் என்பது இந்த சமூகங்களிலுள்ள சில குடும்பங்களின் அடிப்படை வருமான மூலமாகும். சமையல் எரிபொருளுக்கான பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலை என்பன காரணமாக, இந்த வருமான மூலத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் பெண்கள் அண்மைய மாதங்களில் தமது உணவு வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். குறைந்த வருமானம் பெறுபவர்களைக்கொண்ட இக்குடியிருப்புப் பகுதிகளிலுள்ள அதிகமான குடும்பங்களுக்கு விநியோகப் பற்றாக்குறைகளும் விலைவாசி உயர்வும் இரட்டைச் சுமையை ஏற்படுத்துகின்றன. 55 வயதுடைய ராஜலக்ஸ்மி இடியப்பம் தயாரித்து விற்பதைத் தனது ஜீவனோபாயமாகக் கொண்டவர். சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதுடன், மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. இவை அவரது வியாபாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய எரிபொருள் நெருக்கடி தனது வியாபாரத்துக்கு எவ்வாறு சிக்கலாக உள்ளதென்பதை அவர் பின்வருமாறு விபரித்தார்:

"மண்ணெண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில வாரங்களாக நான் இடியப்பம் எதனையும் விற்கவில்லை. சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தியே நான் அனைத்தையும் சமைத்து வந்தேன். இப்போது மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்துகின்றேன். ஆனாலும் மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தி எமக்குத் தேவையானளவு உணவைத் தயாரிக்க முடியாது. எரிவாயுவின் இந்த விலையைக்கொண்டு எம்மால் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது. நேற்று ஐந்து மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்து மூன்று லீற்றர் மண்ணெண்ணெய் வாங்கினேன். நாம் மிக விரைவில் நிதிசார் அனர்த்தமொன்றுக்குள் தள்ளப்படும் நிலையில் உள்ளோம்"

இக்குடியிருப்புப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள், குறிப்பாக ஆண்கள், முறைசாராத் தொழிற்றுறையில் வேலை செய்கின்றனர். இதனால் தொழில் பாதுகாப்பின்மைக்கும் குறைவான ஊதியத்துக்கும் உட்பட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. முச்சக்கர வண்டி ஓட்டுவதே இங்குள்ள ஆண்களுள் கணிசமானோரின் அடிப்படை வருமான மூலமாகக் காணப்படுகின்றது. அவர்களில் சிலர் சொந்தமாக முச்சக்கர வண்டிகளை வைத்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்குப் பெற்று ஓட்டுபவர்களாக அல்லது லீசிங் கம்பெனிகளுக்கூடாக அவற்றைக் கொள்வனவு செய்துள்ளவர்களாகவே உள்ளனர். எவ்வாறாயினும், கொவிட்-19 பெருந்தொற்றுடன் தொடர்புடைய ஊரடங்குகளினாலும் ஊர்முடக்கங்களினாலும் அவர்களின் வருமானம் கணிசமானளவில் பாதிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் வழமையான தொழில் நடவடிக்கைகளுக்குத் திரும்ப முற்படுகையில், இப்போது எரிபொருள் தட்டுப்பாடு எனும் வடிவத்திலான புதிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையானது அத்தகைய மக்கள் ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் பணத்தைச் சம்பாதிப்பதைக் கடினமாக்குகின்றது. பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, தமது முச்சக்கர வண்டியில் பெற்றோலை நிரப்புவதற்கு அவர்கள் 5 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவாக, அவர்கள் முச்சக்கர வண்டி ஓடக்கூடிய மணித்தியாலங்களின் எண்ணிக்கையும், அதன்மூலம் ஈட்டும் வருமானமும் குறைவடைந்துள்ளன.

26 வயதுடைய பர்ஹானா தனது கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றார். கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழ்நிலை காரணமாக பர்ஹானாவின் கணவர் தனது தொழிலை இழந்து, பின்னர் பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் லீசிங் வசதிகளுக்கூடாக முச்சக்கர வண்டியொன்றை வாங்கி தொழிலுக்காக அதனை ஓட்ட ஆரம்பித்தார். எவ்வாறாயினும், தொடர்ச்சியான எரிபொருள் நெருக்கடியானது அக்குடும்பத்தின் நிதி நிலைமைகளைச் சிரமத்திற்குள்ளாக்கியது. பர்ஹானா, தனது குடும்பம் எதிர்நோக்கும் நிதிசார் சிரமங்களைப் பின்வருமாறு விபரித்தார்:

"எனது கணவர் லீசிங் கம்பெனியொன்றிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றை லீசிங் அடிப்படையில் கொள்வனவு செய்தார். அதற்கான மாதாந்த வாடகையாக 20,000 ரூபாவை நாம் செலுத்தியாக வேண்டும். முன்பு அவர் 2,000 ரூபா முதல் 2,500 ரூபா வரை வருமானமாகப் பெற்றார். அதனைக்கொண்டு எமது செலவுகளை ஈடுசெய்யவும், முச்சக்கர வண்டிக்கான வாடகையைச் செலுத்தவும் முடியுமாக இருந்தது. இருப்பினும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு என்பன காரணமாக அவரது வருமானம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. பல சிரமங்களை எதிர்கொண்டு அவர் இப்போது சுமார் 1,000 ரூபாதான் வருமானமீட்டுகின்றார். அத்தொகையைக் கொண்டு எமது நாளாந்தச் செலவுகளைச் சமாளிப்பதே மிகவும் சிரமமாகவுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக நாம் முச்சக்கர வண்டிக்கான வாடகையைச் செலுத்தவுமில்லை. இதனால், லீசிங் கம்பெனி எந்த நேரத்திலும் முச்சக்கர வண்டியைப் பறிமுதல் செய்யலாம்."

குறைந்த வருமானம் பெறுபவர்களைக்கொண்ட குடியிருப்புப் பகுதிகளிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையே பெரிதும் நம்பியிருப்பதால், தற்போதைய எரிபொருள் நெருக்கடி அவர்களுக்கு விடயங்களை மிகவும் கடினமாக்கியுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்துண்டிப்பினால் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, மண்ணெண்ணெய்க்கும் பெற்றோலுக்கும் நீண்ட வரிசைகளில் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கவேண்டியும் உள்ளது. உணவு தயாரித்தல், முச்சக்கர வண்டி ஓட்டுதல் மற்றும் அன்றாடக் கூலி வேலை என்பவற்றிலேயே அதிகமானோரின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதால், விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் விநியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டும் அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சில இடங்களில் அமைதிக் குலைவு ஏற்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடுத்தியது. அத்துடன், குறித்தசில சந்தர்ப்பங்களில் மக்கள் கிளர்ந்தெழுந்தபோது அவர்களை நோக்கி கண்ணீர்ப்புகையும் பிரயோகிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையானது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைத் தோற்றுவித்துள்ளது.

மொஹிதீன் எம். அலிக்கான் (புலம்பெயர்வு பற்றிய ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஆராய்ச்சி ஆலோசகர்) மற்றும் சகீனா அலிக்கான் (புலம்பெயர்வு பற்றிய ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் GIS/வரைபடமிடல் நிபுணர்) ஆகிய இருவரும் உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்புக் (IUI) குழுவின் உறுப்பினர்களாவர். உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்பு (Inclusive Urban Infrastructure) என்பது, ‘உள்ளகப்படுத்தல் பற்றிய பாதைகளை நோக்கி: மிக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான உட்கட்டமைப்புப் பணியை மேற்கொள்ளல்' (மானியக்கொடை குறிப்பிலக்கம் ES/T008067/1) எனும் தலைப்பின்கீழ், உலகளாவிய சவால்கள் பற்றிய ஆய்வு நிதியத்திற்கூடாக UK Research and Innovation எனும் அமைப்பினால் நிதியளிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும்.