வாழ்வாதாரங்களுக்கான இடையூறு: இலங்கையில் பெருமளவிலான மின்வெட்டுடன் வாழ்தல்

அப்துல்லாஹ் அஸாம் -14.04.2022

பலசரக்கு விற்பனையாளர் ஒருவர் தனது கடையை மெழுகுவர்த்தி வெளிச்சத்தைக்கொண்டு ஒளியூட்டுகின்றார்

இலங்கையானது 2021 டிசம்பர் 03 ஆம் திகதி தொடக்கம் மின்சாரம், எரிபொருட்கள் (பெற்றோல் மற்றும் டீசல்) மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றுக்கான பாரிய தட்டுப்பாடுகளுடன்கூடிய எரிசக்தி நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அதிகாரிகளின் கருத்துப்படி, நீர்மின் உற்பத்திக்குரிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதிய எரிபொருள் (நிலக்கரி மற்றும் டீசல்) வழங்கப்படாததன் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் அரச நிறுவனமான இலங்கை மின்சார சபை (CEB) சுழற்சிமுறையிலான மின்வெட்டுக்களை அமுல்படுத்தி வருகின்றது.

மார்ச் 05 ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென இலங்கை அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்தபோதிலும், நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் முதல் 13 மணித்தியாலங்கள் வரையான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இக்கட்டுரை எழுதப்படும்போது, நாளொன்றுக்கு 6.5 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக சகல தரப்புக்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தவணைப் பரீட்சைகளுக்கும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கும் (இவை கடந்த வருடம் கொவிட்-19 காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊர்முடக்கங்களினால் ஏற்கனவே தாமதமாகியுள்ளன) தோற்றவுள்ள மாணவர்கள் இரவு நேரங்களில் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக முதியவர்களும் நோயாளிகளும் மின்தடை அமுல்படுத்தப்படும்போது நீண்ட நேரம் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

மின்வெட்டுக் காரணமாக சிறு வியாபார உரிமையாளர்களும் தமது வியாபார நேரத்தைக் குறைக்க அல்லது முன்கூடிட்டியே தமது வியாபார நிறுவனங்களை மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, கொழும்பிலுள்ள சில வியாபாரிகள் மு.ப. 08.00 மணிக்கு முன்னர் மற்றும் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மாத்திரமே தமது கடைகளைத் திறக்கின்றனர் (இடைப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு மின்சாரம் மிக அரிதாகவே கிடைப்பதால்). இந்த வியாபாரிகளுள் பலருக்கு மின்பிறப்பாக்கிகளை (generators) வாங்குவதற்கும் முடியாத நிலையே காணப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், பின்பிறப்பாக்கிகளுக்குத் தேவையான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய இரு எரிபொருட்களுக்கும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் பல மாதங்களாக நிலவி வருகின்றது.

எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு என்பவற்றினால் நகர்ப்புற மக்களுள் சிலர் சமையலுக்காக விறகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். காற்றோட்ட வசதிகள் குறைவாக அமைந்துள்ள நகர்ப்புற வீடுகளினுள் விறகுகளைப் பயன்படுத்துவதானது, குறிப்பாகக் குழந்தைகளுக்கும் (ஏனெனில், அவர்களின் உடலுறுப்புக்கள் இன்னும் வளர்ச்சியடைந்து வருவதால்) மற்றும் பெண்களுக்கும் (ஏனெனில், பொதுவாக உணவு தயாரிப்பதற்கான பொறுப்பைச் சுமந்துள்ளவர்கள் என்பதால்) மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக அமைகின்றது. இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளவாறு, மண்ணெண்ணெய் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்கள் காத்திருப்பதே இதற்கான ஒரே மாற்றுவழியாகவும் உள்ளது.

பின்தங்கிய சமூகங்களில் வசிக்கும் 95% குடும்பங்கள் முறையான மின் இணைப்பைக் கொண்டுள்ளன என்பதை அண்மையில் நிறைவடைந்த எமது ஒப்புநோக்கற் கருத்துக்கணிப்பின் (Baseline Survey) முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊர்முடக்கங்கள் காரணமாக இலங்கை மின்சார சபை மாதாந்த மின் கட்டணப் பட்டியல்களை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, கடைசியாக அமுல்படுத்தப்பட்ட ஊர்முடக்கத்திற்குப் பின்னர் ஒரு மொத்தத் தொகையைச் செலுத்துமாறு மின் பாவனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனாலும் அவ்வளவு பெரிய தொகையை ஒரே தடவையில் செலுத்த பலருக்கும் முடியாமல் இருந்தது. இருப்பினும், அத்தொகையைச் செலுத்தத் தவறிய மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அவ்வாறு துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக கணிசமானளவு அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததும் மற்றும் பெருமளவிலான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்ததும் நிலைமைகளை இன்னும் மோசமாக்கின.

ஒரு கட்டத்தில், மின்சாரத்தைச் சேமிப்பதற்காக மார்ச் 31 ஆம் திகதிவரை தெருவிளக்குகளை அணைத்துவைக்கும்படி எல்லா உள்ளூராட்சிமன்றத் தலைவர்களையும் பிரதமர் கோரியதுடன், அவ்வாறு செய்வது ஒரு 'தேசிய கடமையாகும்' எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால், இது பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பது குறித்து பலரும் தமது கரிசனைகளை வெளிப்படுத்தினர். பல பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவ இல்லங்கள் முதலியவற்றில் இரவுநேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு தெருவிளக்குகளால் உதவ முடியும். மேலும் நாட்டிலுள்ள வீதிகள், அதிலும் குறிப்பாக கொழும்பிலுள்ள வீதிகள், குறைந்த வெளிச்சத்தில் பயணிக்கத்தக்க நிலையில் காணப்படவில்லை. கொழும்பு மாநகர சபை இடப்பரப்பிலுள்ள உட்கட்டமைப்புசார் பாதுகாப்புக் குறித்து உலக வங்கி ஓர் ஆய்வை நடாத்தியது. அந்த ஆய்வில், அந்தத்தந்தப் பகுதிகளிலுள்ள ஒட்டுமொத்த விளக்கு வெளிச்சத்திற்கமைய 52% பகுதி மாத்திரமே சிறந்த நிலையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரத்தைச் சேமிப்பதற்காக அதிகாரிகள் ஆகக்குறைந்தது தெருவிளக்குகளைக் கோணல்மாணலான முறையிலாவது (zigzag pattern) ஒளிரச் செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரியசக்தியில் ஒளிரும் தெருவிளக்குகளாக மாற்றுவது அவசியமாகும்.

அதேவேளை தேசிய மின்கட்டமைப்பைப் பாதிக்கின்ற வகையிலான நீண்டநேர மின்வெட்டுக்கள், கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமது வலையமைப்பு இணைப்புக்களில் தொடர்ச்சியான இடையூறுகளை எதிர்கொள்ளவும் வழிசமைக்கின்றன. தமது அடிப்படை நிலையங்களில் தடையில்லா இணைப்பை வழங்குவதற்கான காப்புநிலை மின்சக்தி முறைமைகள் (backup power systems) பொருத்தப்பட்டுள்ளதாக சேவைவழங்குனர்கள் கூறுகின்றனர். எனினும், காப்புநிலை பின்பிறப்பாக்கிகள் மூலம் (backup generators) தொழிற்படுத்த முடியாதுள்ள சில கோபுரத் தளங்களில் காணப்படும் மட்டுப்பாடுகள் காரணமாக, அல்லது போதியளவு காப்புநிலை எரிசக்தி முறைமைகளைப் (backup energy systems) பயன்படுத்துவதிலுள்ள தடைகள் காரணமாக, நாடு முழுவதுமுள்ள மக்கள் கைத்தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதிலும் இணையத்தை அணுகுவதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல், அதிகாரிகள் தமது கேள்வி முகாமை பற்றிய எதிர்வுகூறல்களுக்கமைய (demand management forecasts), மின்சாரத்தை விநியோகிப்பதற்குப் போதியளவு திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்நியச் செலாவணி ஒதுக்கீடுகளை முகாமை செய்பவர்கள் எரிசக்தியின் அடிப்படை இயல்பு பற்றிப் புரிந்துள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் கடந்த வருட நடுப்பகுதியில் சமாளிக்கக்கூடிய வகையிலான மின்வெட்டுக்களை (நாளாந்தம் சுமார் 1 மணித்தியாலம்) அமுல்படுத்தத் தொடங்கியிருந்தால், இன்று இலங்கையர்கள் இத்தகைய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்திராது.

அப்துல்லாஹ் அஸாம், புலம்பெயர்வு பற்றிய ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CMRD) செயற்றிட்ட முகாமையாளரும், உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்புக் (IUI) குழுவின் உறுப்பினரும் ஆவார். உள்வாங்கும் தன்மையினதான நகர உட்கட்டமைப்பு (Inclusive Urban Infrastructure) என்பது, ‘உள்ளகப்படுத்தல் பற்றிய பாதைகளை நோக்கி: மிக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான உட்கட்டமைப்புப் பணியை மேற்கொள்ளல்' (மானியக்கொடை குறிப்பிலக்கம் ES/T008067/1) எனும் தலைப்பின்கீழ், உலகளாவிய சவால்கள் பற்றிய ஆய்வு நிதியத்திற்கூடாக, UK Research and Innovation எனும் அமைப்பினால் நிதியளிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும்.

இந்த வலைப்பதிவு முதலில் IUI இணையதளத்தில் வெளியிடப்பட்டது.